×

மபி, சட்டீஸ்கர், தெலங்கானாவில் 229 தொகுதிகளுக்கு முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது: கமல்நாத், பூபேஷ் பாகேல் உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு மீண்டும் சீட்

புதுடெல்லி: மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா ஆகிய 3 மாநிலங்களுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இதில் 229 பேர் இடம்பெற்றுள்ளனர். சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாேகல், ம.பி. முன்னாள் முதல்வர் கமல்நாத் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் பெயர்கள் முதல் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7, 17ம் தேதிகளில் 2 கட்டங்களாகவும், மிசோரமில் நவம்பர் 7ம் தேதி, மத்தியபிரதேசத்தில் நவம்பர் 17ம் தேதி, ராஜஸ்தானில் நவம்பர் 25ம் தேதி, தெலங்கானாவில் நவம்பர் 30ம் தேதி ஒரே கட்டமாகவும் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது.

இதனால் 5 மாநிலத்திலும் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா ஆகிய 3 மாநிலங்களுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. இதில் 229 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. தெலங்கானாவில் 119 இடங்களில் 55 இடங்களுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தற்போதைய சிட்டிங் எம்எல்ஏக்கள் 5 பேருக்கும், 3 எம்பிக்களுக்கும் சீட் தரப்பட்டுள்ளது. மாநில காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான ரேவந்த் ரெட்டிக்கு கொடன்கலா தொகுதியில் சீட் தரப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஆளும் பிஆர்எஸ் கட்சியிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்த சிட்டிங் எம்எல்ஏவான மைனபள்ளி ஹனுமந்தராவுக்கு மல்கஞ்ச்கிரி தொகுதியிலும் அவரது மகன் ரோகித் ராவுக்கு மேதக் தொகுதியிலும் சீட் தரப்பட்டுள்ளது. மத்தியபிரதேசத்தில் 230 தொகுதிகளில் 144 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடுகிறார். மற்றொரு முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்கின் சகோதரர் லட்சுமண் சிங் சச்சௌரா தொகுதியிலும், திக்விஜய் சிங்கின் மகன் ஜெய்வர்தன் சிங் ரகோகர் தொகுதியிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மபி முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை எதிர்த்து புத்னி தொகுதியில் டிவி சீரியலில் அனுமன் வேடத்தில் நடித்த விக்ரம் மஸ்தலை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தி உள்ளது. சட்டீஸ்கரில் 90 தொகுதிகளில் 30 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அம்மாநில முதல்வர் பூபேஷ் பாேகல் படான் தொகுதியிலும், துணை முதல்வர் டி.எஸ். சிங் தியோ அம்பிகாபூர் தொகுதியிலும் களம் காண்கின்றனர். 30 வேட்பாளர்களில் 14 பேர் எஸ்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சிட்டிங் அமைச்சர்கள் 12 பேருக்கும் சீட் தரப்பட்டுள்ளது. அதே சமயம் 8 எம்எல்ஏக்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

The post மபி, சட்டீஸ்கர், தெலங்கானாவில் 229 தொகுதிகளுக்கு முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது: கமல்நாத், பூபேஷ் பாகேல் உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு மீண்டும் சீட் appeared first on Dinakaran.

Tags : Congress ,Mabi, Chhattisgarh, Telangana ,Kamal Nath ,Boobesh Bagel ,New Delhi ,Congress Party ,Madhya Pradesh ,Chhattisgarh ,Telangana ,
× RELATED நெல்லை காங்., தலைவர் ஜெயக்குமார் கொலை...